1.எடுத்த தரும காரியம் நிறைவேற



ஸ்ரீ ராமச்ந்த்ராய நம:

1.எடுத்த தரும காரியம் நிறைவேற
( for the fulfilment of Virtuous Act)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
ஸர்க்கங்கள் 21 முதல் 25 முடிய

உமா ஸம்ஹிதா:
தர்ம காமஸ்து கௌஸல்யா ராம ஸம்வாத மாதராத் I
மங்களாந்தம் ப்டேத் ப்ராத: மத்யாஹ்னே வாஸ்மரந்த் ப்ரபும் II
தாம் தொடங்கிய தரும காரியங்களுக்கு ஏதாவது விக்னம் ஏற்பட்டு, அவை நிறைவேறாமல் போனால், "கௌஸல்யா ராம ஸம்வாதம்" என்ற அயோத்யா காண்டம்
21,22,23,24,25
ஆகிய ஐந்து ஸர்க்கங்களையும் காலையிலோ மாலையிலோ பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனம்: ஐந்து வாழைப் பழங்கள்.

ஸங்கல்பம்:
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ:ப்ரஸாதேன
ப்ராரீப்ஸித தர்மகார்ய ஸமாப்த்யர்த்தம்
கௌஸல்யா ராம ஸம்வாதா த்மக
ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே I

ஸர்க்கம் 21
ஸ்ரீ ராமன் கௌஸல்யையை சமாதானம் செய்தது.
ததாது விலபந்தீம் தாம் கௌஸல்யாம் ராமமாதரம் I
உவாச லக்ஷ்மணோ தீன: தக்கால ஸத்ருச்சம் வச: II (1)
அப்படிப் பிரலாபிக்கும் கௌஸல்யையைப் பார்த்து லக்ஷ்மணன் மிகுந்த வருத்தத்துடன்அந்தச் சமயத்திற்குத் தகுந்தபடி பின் வருமாரு பேசினார்:
'அம்மா! ஒரு ஸ்த்ரீயின் வார்த்தைக்குக் கட்டுபட்டு, தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ராஜ்யத்தை விட்டு ராமன் காட்டிற்குப் போவது உசிதமென்று எனக்கும் தோன்ற வில்லை. கைகேயியின் உத்தரவால் நான் போகவில்லை. அரசனுடைய கட்டளையால் அல்லவா நான் போகிறேன்' என்றால், அவரோ மிகவும் வயது சென்றவர். இந்த்திரிய சுகங்களில் ஆசையை ஒழிக்க முடியாதவர். ஆனால்,பரிசுத்தமனவனை இந்த்திரியங்கள் என்ன செய்ய முடியும்? என்றால், இப்பொழுது அவர் ஒரு ஸ்த்ரீயிடத்தில் எல்லையற்ற ஆசை கொண்டிருக்கிறார். ஆகையால் அவருடைய புத்தி விபரீதமாக இருக்கிறது. இது நியாயம் என்று அவருக்குத் தெரியவில்லை. தான் மிகவும் பிரீதி வைத்த ஸ்த்ரீயை சந்தோஷப் படுத்துவதற்காக எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்று இருக்கும் ஒரு மஹாராஜா என்னதான் சொல்ல மாட்டார்? என்னதான் செய்யமாட்டார்?


"ராமனிடத்தில் எந்தக் குற்றத்தையாவது தோஷத்தையாவது கண்டு வனத்திற்கு அனுப்பியிருக்கக் கூடாதோ என்றால் ராஜ துரோகம் முதலிய கொடிய குற்றங்களை ராமன் செய்தாரா அல்லது கோரமான பாபங்களைச் செய்தார் என்றாவது சொல்ல முடியுமா? அவருக்குப் பரம சத்ருவானாலும் அல்லது ஏதாவது குற்றம் செய்து அதற்காக அவரால் தண்டிக்கப் பட்டுருந்தாலும் அவர் இல்லாத இடத்திலும் அவரைப் பற்றி தோஷத்தைக் கற்பிக்கக் கூடிய மனிதனை இந்த லோகத்தில் காணேன் அப்படியிருக்க அவருக்கெதிரில் எவனாவது சொல்லத் துணிவானோ?


இது நான் யூகமாகச் சொல்லும் விஷயமல்ல. எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. ராமனோ தேவதைகளைப் போல் பரமசுத்தர். அவருடைய மனமும் வார்த்தையும் நடத்தையும் நியாயமான வழியிலேயே எப்பொழுதும் நடக்கும்.குடிகளின் இஷ்டத்தை அனுசரிக்கிறவர். பெரியோரால் பழக்கப் பட்டவர். இந்த்திரியங்களை அடக்கினவர். கைகேயி முதலிய சத்ருக்களுக்கும் பிரியமானவர். தர்மஸ்வரூபி. மேற்சொன்ன குணங்கள் இல்லாவிட்டாலும் சகல தோஷங்கள் இருந்தாலும் மூத்த மகன் என்கிற நியாயத்தால் ராஜ்யத்தில் இருந்து விலக்கத்தகாதவர். இப்படி இருக்க தர்மத்தை அனுஷ்டிக்கும் எந்த மனிதனாவது எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவரை ராஜ்யத்தில் இருந்து துரத்துவானா?.
அது போகட்டும். அரசனுக்குப் பால்யம் திரும்பி இருக்கிறது. காமத்திற்கு வசப்பட்டிருக்கிறார். அப்படிப் பட்டவருடைய வார்த்தையை ராஜ நீதியறிந்த எந்தப் புதல்வானாவது கவனிப்பானா? ஆகையால் அண்ணா! இந்த விஷயம் பிறர்க்குத் தெரிவதற்குள் அந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள்ளும். நான் கையில் வில்லை எடுத்துப் பக்கத்தில் நின்று கொண்டு தங்களைக் காபாற்றும் பொழுது எவனாவது நம்மை மீற முடியுமா? கொல்ல வந்த எமனை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம், நம்மை நெருங்கவும் முடியுமோ? இந்த நகரத்திலுள்ள ஜனங்கள் அனைவரும்  சேர்ந்து நம்மை எதிர்த்தாலும், என் கூர்மையான பாணங்களால் இதை மனுஷ்ய சஞ்சாரமில்லாமல் செய்ய மாட்டேனா? பரதனுக்கு நண்பர்களையும் உதவி செய்கிறவர்களையும் , அவர்கள் யாராயிருந்தாலும் ஒரு நொடியில் நாசம் செய்கிறேன். கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியல்லவா? ஏழையைக் கண்டால் மோழையும் பாயாதோ ?

நமது பிதா கைகேயினால் தூண்டப்பட்டு, நமது சத்ருக்களுக்கு உதவி செய்தால், அந்தத் துர்புத்தி பிடித்தவரை ஏன் சிறையில் வைக்கக்கூடாது?. ஏன் கொல்லக்கூடாது?. எல்லையற்ற கர்வத்தையடைந்து, இதைச் செய்யலாம், இதைச் செய்யகூடாது என்ற விவேகமின்றிக் கெட்ட வழியில் நடப்பவரை, நமக்குக் குருவானாலும் பிதாவானாலும், சிக்ஷித்து அந்த வழியிலிருந்து விலக்கவேண்டுமென்று மனு முதலிய தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.


உமக்குத் தர்மாய்க் கிடைக்கவேண்டிய இந்த ராஜ்யத்தை கைகேயிக்குக் கொடுக்கத் துணிந்ததற்கு என்ன காரணம்?. தன் ஸைன்யங்களால் உம்மை ஜெயித்து துரத்தி விடலாமென்றோ?. அல்லது முன்பு கைகேயிக்கு கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்வதென்ற காரணத்தாலோ?. அவ்விரண்டும் இங்கே செல்லாது. உம்மையும் என்னையும் விரோதித்துக் கொண்டு பரதனுக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுக்க இவரால் முடியுமா?.


அம்மா! ராமன் என் சகோதரர், என்னால் பூஜிக்கத் தகுந்தவர். அவரிடத்தில் உண்மையான பிரீதியை வைத்திருக்கிறேன். நான் பேசும் சத்தியத்தையும் கையில் பிடித்திருக்கும் வில்லையும் கொடுத்திருக்கும் தானங்களையும் செய்திருக்கும் தேவபூஜைகளையும் சாட்சி வைத்து ஆணையிட்டு சொல்லுகிறேன். பயங்கரமான காட்டிற்கு ராமன் போனாலும் சரி. ஜொலிக்கும் நெருப்பில் குதித்தாலும் சரி. அவருக்கு முன், என்னை அங்கே பார்க்கலாம். தாயே, தாங்கள் படும் கஷ்டத்தை என் வீரியத்தால் அழிக்கிறேன். என் பராக்கிரமத்தைத் தாங்களும் அண்ணனும் இன்றல்லவா பார்க்கப் போகிறீர்கள்.


அதைக் கேட்டு கௌசல்யை சோகத்தால் மனம் கலங்கி அழுது கொண்டு, "குழந்தாய்! தம்பி லக்ஷ்மணன் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தனவா? இதற்குமேல் என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அப்படிச் செய். பிதாவின் கட்டளையை எவ்வாறு மீறி  நடப்பேன் என்று சொல்லலாம்.ஆனால், இது அவர் செய்த கட்டளை அல்ல. எனக்கு விரோதியான கைகேயி ஏய்த கட்டளை. மேலும் தர்ம விரோதமானது. அப்படியிருக்க அதைக் கேட்டு, துக்கத்தால் தவிக்கும் என்னை அனாதையாய் விட்டு நீ காட்டிற்குப் போவது நியாயமா?.


நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். உன் பிதாவின் கட்டளையை நிறைவேற்றுகிறதென்ற தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாய். ஆனால் அதைக் காட்டிலும் மேலான தர்மம் ஒன்றுண்டு. கேள். லோகத்திலுள்ள மற்ற யாவாவற்றையும் காட்டிலும் தாயே ஒருவனுக்கு மேலான வஸ்து என்று தர்ம சாஸ்திரங்கள் உபதேசிக்கின்றன. ஆகையால் நீ இங்கிருந்தே எனக்குப் பணிவிடை செய். இதை விட சிரேஷ்டமான தர்மமில்லை. முன் காலத்தில் காசியபர் இந்திரியங்களை அடக்கி, தன் வீட்டிலிருந்தே தன் மாதாவுக்கு ஒப்பற்ற சிச்ரூஷை செய்து வந்தார். அந்த சிரேஷ்டமான தவத்தால் உத்தம லோகங்களை அடைந்து பிரஜாபதிகளில் ஒருவரானார்.


உன் பிதா உனக்கு எப்படியோ நானும் அப்படியல்லவா? உனக்கு அவர் எப்படிப் பூஜிக்கத் தகுந்தவரோ நானும் அப்படியல்லவா?. அவ்ருடைய கட்டளையை எப்படி நிறைவேற்ற வேண்டுமோ அப்படியே என் கட்டளையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா?. நீ காட்டிற்குப் போவதில் எனக்கு இஷ்டமில்லை. அதற்கு அனுமதி கொடுக்கமாட்டேன். நீ இல்லாமல் எனக்கு என்ன சுகம்?. உன்னை விட்டு நான் பிழைத்திருக்கவும் வேண்டுமோ? உன்னுடனிருந்து நான் புல்லைத் தின்று கொண்டிருந்தாலும் அதுவே எனக்கு நல்லது. நான் துக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போழுது நீ என்னை விட்டுக் காட்டிற்கு போனால், நான் பட்டினியிருந்து உயிரை விடுவேன். முன் காலத்தில் சமுத்திர ராஜன் தன் தாய்க்கு துக்கத்தை செய்வித்ததால், பாவத்தால் பிராமணனைக் கொன்றவர்கள் அடையும் நரகத்தை அடைந்தான். நீயும் நரகத்தில் என்றும் அழியாத துக்கத்தை அடைவாய், என்றாள்.


இப்படிச் தீனமாய்த் தன் தாய் சொல்வதைக் கேட்டு, தர்ம ஆத்மாவான ராமன், தர்மத்தை அனுசரித்து, "நான் என் பிதாவின் கட்டளையையும் நிறைவேற்ற வேண்டும், தங்களுடைய கட்டளையையும் கீழ் படிய வேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டையும் அனுஷ்டிக்க முடியாது. மேலும், அவருடைய கட்டளையோ முந்தினது. அதையே இப்பொழுது நிறைவேற்ற வேண்டும். அதை மாற்றக்கக் கூடாது. ஆகையால் நான் வனத்திற்குப் போக வேண்டும். தங்கள் பாதத்தில் நமஸ்கரிக்கிறேன். அருள் கூர்ந்து அனுமதி அருள வேண்டும்.


"இப்படிச் செய்து உன் தாய்க்குத் துக்கத்தை உண்டு பண்ணலாமா" என்றால், முன் காலத்தில் சகல தர்மங்களையும் அறிந்த, கண்டு மஹரிஷி தன் தகப்பன் உத்தரவால் ஒரு பசுவைக் கொன்றார். அவர் தபஸ்வியல்லவா? நமது குரு குலத்தில் சகரர் என்ற அரசர் இருந்தார். தன் அறுபதாயிரம் புத்திரர்களை இந்தப் பூமி முழுவதையும் வெட்டும்படி கட்ட்ளை இட்டார். அதை நிறைவேற்றியதனால் அவர்கள் சாம்பலாக எரிக்கப் பட்டார்கள். அப்படி உயிரைக் கொடுத்தாவது என் பிதாவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியிருக்கபதினான்கு  வருடங்கள் வரையில் காட்டில் இருப்பது ஒரு பெரிய கஷ்டமா?. தன் தந்தையின் கட்டளையால் பரசுராமர் தன் தாயான ரேணுகையைக் கோடாரியால் வெட்டிக் கொன்றார். அப்படியிருக்கத் தங்களுக்குச் சில காலம் துக்கத்தை உண்டுபண்ண வேண்டுமேயென்று தயங்கலாமா? இதைப்போல் தேவதைகளுக்கு சமமான இன்னும் பலர் தங்கள் பிதாவின் வார்த்தையை நிறைவேற்றி இருக்கிறார்கள். நானும் அப்படியே செய்ய விரும்புகிறேன். இது நான் ஒருவன் மட்டும் கடைபிடிக்கும் தர்மமல்ல. பிறரால் கடைபிடிக்கப் படாததுமல்ல. நான் இப்பொழுது சொன்ன பெரியோர்கள், இப்படியே தம் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி இருக்கிறார்கள். நமது முன்னோர்கள் இதை ஒப்பு கொண்டிருக்கிறார்கள். பெரியோர்கள் நடந்த வழியிலேயே நானும் நடக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லோரும் கடைபிடிக்கும் மேலான தர்மம் இதுதானேயன்றி நான் சுய புத்தியால் கற்பித்ததல்ல. தங்களுக்கு வருத்தத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தால் செய்ததுமல்ல. பிதாவின் கட்டளையை நிறைவேற்றுவதால் மாதாவிற்குக் கொஞ்சம் துக்கம் நேர்ந்தாலும் அதனால் கெட்டவன் உலகத்தில் இதுவரையிலுமில்லை" என்றார்.


நன்றாகப் பேசும் திறமை உள்ளவர்களுக்குள் மேலானவரும் வில்லாளிகளுக்குள் ஒப்பில்லாதவருமான ராமன் லட்சுமணனை பார்த்து, "லட்சுமணா, உனக்கு என்னிடத்தில் இருக்கும் எல்லையற்ற பிரீதியையும் உனது பராக்கிரமத்தையும் தைரியத்தையும் ஒருவராலும் தாங்க முடியாத தேஜஸையும் அறிவேன். சத்தியத்தின் ரகசியத்தையும் சாந்தியின் ரகசியத்தையும் அறியாமல் என் தாய் மிகவும் வருத்தப் படுகிறாள். தர்ம ரகசியத்தை அறிந்த நீயும் இப்படிச் சொல்வது சரியல்ல. சத்தியம் தர்மத்திலேயே வேரூன்றியிருக்கிறது. ஆகையால், புருஷார்த்தங்களில் சத்தியமே மேலானது. இப்பொழுது  என் மாதாவின் வார்த்தையைக் காட்டிலும் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதால் அந்த தர்மம் கிடைக்கும். தர்மத்தில் ஆசையுள்ளவன் பெற்றோர்களுக்காவது பிராமணர்களுக்காவது ஒரு விஷயத்தை வாக்களித்து விட்டுப் பிறகு தவறுவானா? இப்பொழுது என் தந்தையின் உத்தரவால் கைகேயி என்னை வனம் போகச் சொன்னாள். அவருடைய கட்டளையை மீறி நடக்க நான் சக்தியற்றவன். ஆகையால், நமது தகப்பனாயிருந்தாலும் அவரைக் கொன்று விட்டு இந்த ராஜ்யத்தை ஆளுவோம் என்ற சத்தியர்களுக்கு மட்டுமுள்ள குரூரமான புத்தியை விடு. நாத்திகர்களைப் போல் தர்மத்திற்கு ஒவ்வாத நீதியை மாத்திரம் அனுசரிக்காதே. பிறருக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணும் வழியில் செல்லாதே. நான் நடப்பதைப் பார், என்று லட்சுமணனிடத்திலுள்ள மிகுந்த அன்பினால் இப்படிக் கூறி, மறுபடியும் கௌசல்யையை கை கூப்பி வணங்கி கொண்டு, "அம்மா!, தாங்களும் நானும் சீதையும் லட்சுமணனும் சுமித்திரையும் என் பிதாவின் கட்டளைக்குக் கீழ் படிய வேண்டியது புராதன  தர்மம். முதலில் அவர் உத்தரவு செய்ததால் அப்படி பதி நான்கு வருஷங்கள் வரையில் காட்டில் வசித்து விட்டு பிறகு தங்களுடைய கட்டளைப் படி, தங்களுடைய பக்கத்திலிருந்து சிச்ரூஷை செய்வேன். முன் காலத்தில் யயாதி சொர்க்கத்திலிருந்து பூமியில் விழுந்து, பிறகு சொர்க்கத்திற்கு போனது போல், நானும் கொஞ்ச காலம் கஷ்டத்தை அனுபவித்து என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி மறுபடியும் தங்களைத் தரிசனம் செய்கிறேன். ஆகையால், தாங்கள் துக்கத்தை அடக்கிக் கொண்டு எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நான் நல்லவிதமாகப் போய் வருவதற்கு வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய வேண்டும். என் உயிர்மேல் ஆணையிட்டு சொல்கிறேன். இப்பொழுது என் அபிஷேகத்திற்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு, துக்கத்தை வெளியில் காட்டாமல் தர்மத்தைக் காபாற்றுவதற்காக, நான் வனத்திற்குப் போவதை அனுமதிக்க வேண்டும்", என்றார்.


ராமன் இப்படித் தர்மத்தை அனுசரித்தும், கொஞ்சம் கூட வருத்தமில்லாமலும், உறுதியாயும் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கௌசல்யை, துக்கத்தால் மூர்ச்சையடைந்தாள். பிறகு நினைவு தெளிந்து, "குழந்தாய், நமக்குள்ள சரீர சம்பந்தத்தாலும், உன்னைப் பெற்று வளர்த்ததாலும், உன் தந்தைக்கு சமமாக, நீ என்னை பூஜிக்க வேண்டும். சொல்ல முடியாத துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னை விட்டு, நீ காட்டிற்குப் போகக் கூடாது. நான் சம்மதிக்க அனுமதிக்க மாட்டேன். நீ இல்லாமல் இந்த உலகத்தில் நான் பிழைத்திருந்து என்ன பயன்?. பித்ரு உலகத்திலாவது, சொர்கத்திலாவது, ஆனந்தத்தைக் கொடுக்கும் மேல் உலகங்களிலாவது நான் இருந்தாலும் என்ன சுகம்?, உன்னருகில் ஒரு முகூர்த்தமிருப்பதற்கு இவையெல்லாம் ஈடாகுமா?" என்றாள்.


யானையைப் பிடிக்கிறவர்கள், தீவட்டிப் பந்தங்களுடன் அது போகும் வழியில் ராத்திரியில் நின்று தடுத்தாலும் அதன் கோபம் அதிகரிக்குமேயல்லாது தான் குறி வைத்த பாதையில் இருந்து திரும்புமோ? அப்படித் தன் தாய் வெகு தீனமாகப் பிரலாப்பிப்பதைக் கேட்டும் ராமனுடைய மன உறுதி மறுபடியும் பலமடைந்தது. அவள் சோகத்தால் பிரக்ஞையற்று இருப்பதையும் லட்சுமணன் துக்கத்தால் தவிப்பதையும் பார்த்தும் கூட, தர்மத்தில் நாடிய மனத்தையுடைய ராமன், தர்மத்தை அனுசரித்து மறுமொழி சொன்னார். இப்படி நான்கு பக்கங்களிலும் தர்மத்தால் நிர்பந்திக்கப் பட்டு, அவைகளில் உத்தமமான தர்மம் எது என்று கண்டுபிடித்து அதை ஒரே உறுதியாக அனுஷ்டித்தவர்கள் ராமனைத் தவிர இந்த மூன்று உலகங்களிலும் வேறு ஒருவர் உண்டோ? இப்படிப் பேசத் தகுந்தவர் அவரே.


லட்சுமணா, உனக்கு என்னிடதிலுள்ள பக்தியையும் உன் பராக்கிரமத்தையும் நன்றாக அறிவேன். ஆனால் என் அபிப்பிராயத்தைப் பூரணமாக அறியாமல் நீயும் என் தாயும் எனக்கு வீண் வருத்தத்தை உண்டாக்குகிறீர்கள். தர்மத்தைப் பற்றிச் சுருக்கமாக இதுவரையில் சொன்ன வார்த்தைகளை விவரமாகச் சொல்லுகிறேன் கேள். ஒருவனுடைய மனைவி அவனுடைய கட்டளைப்படி நடப்பதால் தர்மத்தையும் அவனுடைய பிரீதிக்குப் பாத்திரமாயிருப்பதால் காமத்தையும், நல்ல புத்திரனைப் பெறுவதால் அர்த்தத்தையும் சம்பாதிக்கிறாள். இப்படியே தர்மார்த்த காமமென்ற புருஷார்த்தங்கள், தர்மத்தால் கிடைக்கும் சுகத்திற்கு, உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன. தர்மம் ஒன்றையே நன்றாக அனுஷ்டித்தால் இம்மூன்றும் கிடைக்கும். இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. மேற்சொன்ன புருஷார்த்தங்கள் எதனால் கிடைக்காதோ அதை ஆரம்பிக்கக் கூடாது. எந்தக் காரியத்திலிருந்து தர்மம் விளையுமோ, அதையே செய்ய வேண்டும். கேவலம் அர்த்தத்தையே நாடுகிறவனை உலகத்தார் அனைவரும் வெறுக்கிறார்கள். கேவலம் காமத்தையே நாடுவதும் அப்படியே. இப்பொழுது நான்  செய்ய வேண்டிய தர்மம் என்னவென்று யோசிப்போம். தனுர் வேதம் ராஜ நீதி முதலியவை எனக்கு உபதேசித்ததால் மஹாராஜா எனக்கு ஆசாரியார். என்னைக் காப்பாற்றும் அரசன். என்னைப் பெற்ற பிதா. வயதால் பெரியவர். அப்படிப் பட்டவர் கோபத்தாலோ சந்தோஷத்தாலோ காமத்தாலோ ஏதாவது ஒன்றைக் கட்டளை இட்டால் குரூரமான தன்மையையும், நடத்தையையும் உடையவனைத் தவிர,ஒருவன்  சொன்ன வார்த்தையை நிறைவேற்றாமலிருப்பானா? நான் குரூர சுபாவமுள்ளவனல்ல. என் பிதா செய்த பிரதிக்ஞையை என்னால் முடிந்தவரையில் நிறைவேற்றுவேன்.


அவர் நம்மிருவருக்கும் பிரபு. என் தாய்க்கும் அப்படியே. அவளுக்கு அவரே உத்தம கதி. அவள் புண்ணிய உலகங்களை அடைவதற்கு அவரே சாதனம். நமது முன்னோர்களைக் காட்டிலும் அவர் விஷேசமாகத் தர்மத்தை அனுசரித்து நெறி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் பொழுது, என் தாய் திக்கற்ற ஒரு சாதாரண பெண்மணியைப் போலவும் கணவனை இழந்தவளைப் போலவும் என்னுடன் வனத்திற்கு வருவது உசிதமா?


"அம்மா, நான் வனத்திற்குப் போகிறேன். உத்தரவு கொடுங்கள். நான் திரும்பி ஷேமமாய் வந்து சேருவதற்கு மங்கள காரியங்களைச் செய்யுங்கள். யயாதி மஹாராஜா சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு சத்தியத்தைச் சொன்னதால் மறுபடியும் சொர்க்கத்திற்குப் போனதைப் போல், நானும் பதி நான்கு வருடங்கள் முடிந்தவுடன் திரும்பி வருகிறேன். தர்மமாகக் கிடைக்காத இந்த ராஜ்யத்தில் ஆசைப்பட்டு கீர்த்தி  என்ற விஷேசப் பிரயோஜனத்தைத் தள்ளி விட என்னால் முடியாது. நமது ஜீவ காலம் வெகு அல்பம். மின்னல் கொடியைப் போல நிலையற்றது. அதில் அதர்மத்தை செய்தாவது இந்தப் பூமியை ஆளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை", என்று புருஷோத்தமரான ராமன் தன் தாயை சமாதானப் படுத்திக் கைகேயியின் சொற்படி அங்கிருந்து சீக்கிரமாகப் புறபட்டு வனத்திற்குப் போக நிச்சயித்து, லட்சுமணனுக்குத் தன் உண்மையான அபிப்பிராயத்தைத் தெரிவித்துத் தன் தாயை பிரதக்ஷிணம் செய்து உத்தரவு பெற்றுக் கொள்ள உத்தேசித்தார்.


21   சர்க்கம் நிறைவு.     ஸ்ரீ ராம ராம ராம  

                                                                சர்க்கம் 22